Vettri

Breaking News

போலி வீடியோ தொடர்பில் நடிகை ராஷ்மிகா வருத்தம்





 போலி வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், சம்பவம் குறித்து நடிகை ராஷ்மிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறதோ, அதேவேளையில் அதில் அதிகமான ஆபத்துக்களும் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அண்மை காலமாக டிரெண்டிங்கில் உள்ளது. இதைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும்.

இந்த தொழில்நுட்பம் அண்மையில் கூட தமன்னாவின் காவாலா பாடல் நடன வீடியோவை, நடிகை சிம்ரன் ஆடியது போல் அப்படியே தத்ரூபமாக மாற்றி காட்டி இருந்தது. அப்போது அந்த வீடியோவுக்கு பலரும் தத்ரூபமாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர். நடிகை சிம்ரன் கூட அந்த வீடியோவை பார்த்து தான் நடனமாடியது போல் இருப்பதாக கூறி ஆச்சரியத்தில் மூழ்கி போனார்.

அந்த தொழில்நுட்பத்தின் ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. அதன்படி, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது உண்மை என நினைத்து பலரும் வைரலாக்கினர். ஆனால் உண்மையில் இது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவாகும்.

இதனை பொலிவூட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் கண்டித்ததோடு, இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகை ராஷ்மிகா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “இணையத்தில் வைரலாகி வரும் செயற்கை தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக இருக்கிறது.

உண்மையாக இப்படியான ஒன்று,  எனக்கு மிகவும் பயத்தை உருவாக்கி இருக்கிறது. நான் மட்டுமல்ல, இன்றைய உலகில் இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதால் பலரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இன்று நான் ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் என்னுடைய குடும்பம், நண்பர்கள், என்னை பாதுகாப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியுடன் இருக்கிறேன். 

ஆனால் இந்த மாதிரியான ஒன்று என்னுடைய பாடசாலை மற்றும் கல்லூரி காலங்களில் நடந்து இருந்தால், அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதனால், இதன் மூலம் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து தெரியப்படுத்த  வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். கடந்த 2018 ஆம் ஆண்டு அர்ஜூன் ரெட்டி திரைப்பட புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். 

தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா, விஜயின் வாரிசு, அமிதாப்பச்சனின் குட் பாய் உள்ளிட்ட பல படங்களில் நட்சத்திர நடிகையாக  வலம் வருகிறார்.

No comments