கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு உடனடியாக பதவி விலக வேண்டும் - ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக போராட்டக்காரர்கள் வலியுறுத்தல் ; நாளைய போராட்டத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் அழைப்பு
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு மற்றும் அதன் தெரிவுக்குழுவினர் உடனடியாக பதவி விலக வேண்டும். அரசியல் தலையீடுகள் இல்லாமல் திறமையானவர்கள் கிரிக்கெட் நிறுவனத்துக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இலஞ்ச ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஜாமினி கெமந்து, பேராசிரியர் அஜந்த பெரேரா ஆகியோர் உட்பட இளைஞர்கள், யுவதிகள் பலர் இன்று சனிக்கிழமை (04) காலை கொழும்பில் உள்ள கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (05) காலை கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக ஒன்றுகூடி அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபடுவோம்; விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அமைதி வழிப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என இதன்போது இளைஞர்களும் யுவதிகளும் வலியுறுத்தினர்.
இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினால் கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக பெருமளவான பொலிஸாரும் கலகத் தடுப்பு பிரிவினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த போராட்டம் தொடர்பில் இலஞ்ச ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஜாமினி கெமந்து குறிப்பிடுகையில்,
ஐ.பி.எல். போட்டியில் இடம்பெற்ற மோசடி மற்றும் கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய தரப்பினருக்கு முறைப்பாடு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி கவலைக்குரியது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. தேசிய பிரச்சினையாக இந்த விடயம் காணப்படுகிறது. கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடி இடம்பெறுவதால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்கமாக குறிப்பிடுகிறார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிரிக்கெட் நிறைவேற்று குழுவின் அதிகாரிகளை பதவி விலக்க வேண்டும் அல்லது நிறைவேற்று குழுவின் உறுப்பினர்கள் தமது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள சுயமாக பதவி விலக வேண்டும். இவர்கள் சுயமாக பதவி விலகுவதற்கான சாத்தியம் கிடையாது என்பதால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக ஒன்றுகூடி அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபடுவோம். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அமைதி வழிப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என இளைஞர், யுவதிகள் வலியுறுத்தினர்.
கிரிக்கெட்டை நேசிக்கும் சகலரும் இந்த அமைதி வழிப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
No comments