கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது!!
கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்
ஒருவரை விடுதி ஒன்றில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஒழிப்புக்குழுவினரால் நேற்று புதன்கிழமை (22) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே குற்றச் செயல் ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.
குறித்த பெண் மாதத்தில் ஒருநாள் நீதிமன்றம் சென்று கையொழுத்திட்டுவரும் நிலையில், அங்கு கடமையாற்றி வரும் கல்முனை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்தப் பெண்ணை அணுகி பாலியல் இலஞ்சம் கோரியுள்ளர்.
இதனையடுத்து, குறித்த பெண் கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் விடயம் குறித்து தெரிவித்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் கல்முனை கடற்கரை பகுதியிலுள்ள உல்லாச விடுதிக்கு பெண்ணை செல்லுமாறு கூறிய இலஞ்ச ஊழல் பிரிவினர் அங்கு மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பெண் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியை விடுதிக்கு வருமாறு அழைத்த நிலையில், பொலிஸ் அதிகாரி விடுதி அறைக்கு சென்ற நிலையில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் பொலிஸ் அதிகாரியை மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 28 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரியை கொழும்பிற்கு இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஒழிப்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments