இந்தியாவை வீழ்த்வது கடினம் என்பதை நாங்கள் அறிந்துள்ளதால் நாங்கள் அதி உயிரிய கிரிக்கெட் ஆற்றல்களுடன் விளையாட வேண்டும்' - இலங்கை தலைமைப் பயிற்றுநர்
ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி
இலங்கைக்கு உத்வேகத்தை சேர்த்திருக்கும் என கருதுவதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட், மும்பை வான்கடே விளையாட்டரங்கில் புதன்கிழமை (1) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் துவண்டு வீழ்ந்த இலங்கை, அதிலிருந்து மீளும் வகையில் உலகக் கிண்ணப் போட்டியில் சாதிக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானுடனான தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவை வியாழக்கிழiமை (02) இலங்கை சந்திக்கிறது.
இந் நிலையில் தொடர்ந்து பேசிய அவர்,
'ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி வீரர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன். பெரும்பாலும் அவர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்துவதற்கு அந்தத் தோல்வி வழிவகுத்திருக்கிறது. எனினும் இந்தியா ஒரு சிறந்த அணி என்பது எங்களுக்கு தெரியும்.
அவர்கள் உலகக் கிண்ணத்தில் இதுவரை சிறப்பாக விளையாடியதை நாங்கள் பார்த்தோம். ஆனால் எங்களது வீரர்கள் எவ்வளவு திறமைசாளிகள் என்பதை எடுத்துக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என நான் நினைக்கிறேன். எனவே, ஆசிய கிண்ணத் தோல்வியை நிவர்த்திக்க வீரர்கர்கள் உத்வேகத்துடன் விளையாடுவார்கள்.
'இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மட்டுமல்ல நாட்டிற்காக விளையாடுவது என்பது வீரர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்பதை சகலரும் அறிவர். எனவே எமது வீரர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கின்றனர் என கருதுகிறேன். அவர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் உற்சாகத்துடன் பங்குபற்றுகின்றனர்.
சில சமயங்களில் எமது அணி சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. எனவே வியாழக்கிழமை (2) போட்டியில் அதனை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். அதற்கு வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவை வீழ்த்வது கடினம் என்பதை நாங்கள் அறிந்துள்ளதால் நாங்கள் அதி உயிரிய கிரிக்கெட் ஆற்றல்களுடன் விளையாட வேண்டும்' என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி குறித்து கேட்டபோது,
'அந்தத் தோல்வியால் நாங்கள் அனைவரும் அன்றைய இரவில் பெரும் ஏமாற்றத்திற்குள்ளானோம். ஆப்கானிஸ்தான் அணியினர் அன்றைய தினம் மிகவும் திறமையாக விளையாடினார்கள், அவர்கள் வெகுவாக முன்னேறிவருவதுடன் யாரையும் வெற்றிகொள்ளும் திறன் கொண்டவர்கள். அந்தத் தோல்விக்குப் பின்னர் வீரர்களின் உடை மாற்றும் அறையில் நாங்கள் விரிவாக கலந்துரையாடினோம். குறைகளைப் பற்றி நிறைய ஆராய்ந்து அவற்றைத் திருத்திக்கொள்வதெனத் தீர்மானித்தோம்.
இப்போது இங்கு வந்து சரியானவற்றை செயலுருவில் காட்ட முயற்சிப்போம். அதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம்' என கிறிஸ் சில்வர்வூட் மேலும் கூறினார்.
No comments