சிறைச்சாலையில் இருந்த மற்றுமொரு கைதி மர்ம மரணம்! சரச்சையை கிளப்பும் தொடர் பலிகள்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (48) வயதுடைய சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் சட்ட விரோதமான முறையில் கசிப்பு சாராயம் உற்பத்தியில் ஈடுபட்டு விற்பனை செய்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
மரண விசாரணை
குறித்த நபர் கடந்த (28) அன்று ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.
இந்நிலையில், வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது உடலின் உட்பகுதியில் காயங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.
உட்பகுதியில் காயங்கள்
இதனையடுத்து சம்பவம் பற்றி திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் காவல்துறையினரின் ஊடக நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளின் மர்ம மரணம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு கைதி தற்போது மர்மமாக உயிரிழந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
No comments