கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு : புத்தளத்தில் சோகம்
புத்தளத்தில் நேற்று (04) பிற்பகல் கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
மதுரங்குளி பகுதியில் குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்தே குறித்த பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
நேற்று பிற்பகல் வேளையில் குழந்தையின் தாய் மற்றும் அம்மம்மா ஆகியோர் வீட்டு முற்றத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த குழந்தை வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய்க்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
தமது வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டில் சேகரித்த குப்பைகளை கொட்டுவதற்காக கால்வாய்க்கு அருகே சென்ற போது குழந்தை நீரில் மிதந்துகொண்டிருப்பதை தாய் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனையில் நீரில் மூழ்கியதில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments