நிட்டம்புவ வாகன விற்பனை நிலையத்தில் ஜீப் கடத்தல் முயற்சி: அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் உட்பட 7 பேர் கைது!
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்று ஜீப் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அங்கிருந்த ஜீப் ஒன்றை பரீட்சிப்பதற்காக கொண்டு சென்ற நிலையில் அதனைக் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வர்த்தக நிலையத்துக்கு சென்ற ஒருவர் மொண்டேரோ ரக ஜீப் வண்டியை கொள்வனவு செய்ய வந்ததாகவும் அதனை பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
அப்போது, நிறுவன உரிமையாளரான தொழிலதிபரும் ஜீப்பில் ஏறி அந்த நபருடன் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பஸ்யால பகுதியில் இரு கார்களில் வந்த சிலர் ஜீப்பை வீதியில் நிறுத்தி அதனைக் கடத்த முற்பட்டபோது, ஜீப்பில் இருந்த நபரின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாத உரிமையாளர், ஜீப்பை தனது நிறுவனத்துக்கு செலுத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து நிறுவன ஊழியர்கள் ஜீப்பில் இருந்த நபரை பிடித்ததுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஏனையோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments