இலங்கையில் டெங்கு நோய் தீவிரம் : 69 ஆயிரத்தைக் கடந்த நோயாளர்கள்
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருடத்தில் இன்று வரை மொத்தமாக 69 ஆயிரத்து 231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த காலப்பகுதியில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டத்தில் இதுவரையில் 14 ஆயிரத்து 634 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
39 பேர் உயிரிழந்துள்ளனர்
அத்துடன், மேல் மாகாணத்தில் 33 ஆயிரத்து 139 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மாதத்தில் 4 ஆயிரத்து 10 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும், இந்த மாதத்தில் இன்றுவரை 738 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments