யாழ். அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டியை கழுத்து நெரித்து கொலை செய்த 3 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 89) என்ற வயோதிப மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சடலத்தில் காயங்கள் காணப்பட்டதன் காரணமாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பி. வாசுதேவா உடற்பாகங்களை இரசாயண பகுப்புக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவ்வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகிய மூவர் நெல்லியடி பொலிஸாரால் இம் மாதம் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பருத்துத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கு நேற்று புதன்கிழமை (15) மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பருத்தித்துறை நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை மூன்று சந்தேக நபர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.
No comments