Vettri

Breaking News

35 ஆவது பிறந்த நாளில் 49 ஆவது சதம் விளாசிய விராட் கோஹ்லி : 50 ஆவது ஒரு நாள் சதத்தை பெறப்போகும் முதல் வீரர்




 இந்திய கிரிக்கெட் அணியின் Run Machine என வர்ணிக்கப்படும் முன்னாள் அணித்தலைவரும் அதிரடி ஆட்ட வீரருமான விராட் கோஹ்லி தனது 35 ஆவது பிறந்த நாளை வாழ் நாளில் மறக்க மாட்டார். 

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 49 ஆவது சதத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் திகதி பூர்த்தி செய்த அவர் தனது 35 ஆவது பிறந்த நாளன்று தனது மண்ணில் உலகக்கிண்ணத்தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் பெற்ற முன்னாள் அதிரடி வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் சமன் செய்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 05/11/2023 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற போது முதலில் இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 

இதன் போது மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோஹ்லி ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்பு அதிரடியாகவும் விளையாடி 119 பந்துகளை எதிர்கொண்டு சதம் பெற்றார். 

சர்வதேச ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களைப்பெற 452 இன்னிங்ஸ்களில் விளையாடியிருந்தார். 

எனினும் விராட் கோஹ்லி வெறும் 277 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

‘இந்திய அணிக்கு ஆடுவதற்காக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையுமே நான் முக்கியமானதாகத்தான் பார்க்கிறேன். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் என்னுடைய பிறந்த தினத்தில் இப்படியொரு சதத்தை அடித்ததில் மகிழ்ச்சி." என தனது இன்னிங்ஸ் குறித்து அவர் தெரிவித்திருக்கின்றார்.  




கொல்கத்தை ஈடன் கார்டன் மைதானத்தில் திரண்டிருந்த சுமார் 70 ஆயிரம் இரசிர்கள் விராட் கோஹ்லி சதத்தை நெருங்கம் தறுவாயில் தமது செல்லிடப்பேசி விளக்கை ஒளிர வைத்து அவருக்கு உற்சாகம் ஊட்டினர்.

இந்த உலகக்கிண்ணத் தொடரில் இரண்டு சதங்களையும் நான்கு அரைச்சதங்களையும் அடித்துள்ள கோஹ்லி தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மொத்தமாக 543 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முதலிடத்தில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் 550 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

இதே வேளை ஒரு நாள் சர்வதேச போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் ஐம்பது சதங்களைப் பெறப்போகும் முதல் வீரர் என்ற பெருமையை விராட் பெறப்போகின்றார். இத்தொடரில் எந்த போட்டிகளிலுமே தோல்வியை சந்திக்காத அணியாக இந்தியா விளங்குகின்றது. ஆகவே நிச்சயமாக கோஹ்லி அந்த மைல்கல்லை அடைவார் என்று கூறலாம்.

இதற்கு முன்பதாக சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்களையும் ரோகித் சர்மா 251 இன்னிங்ஸ்களில் 31 சதங்களையும் ரிக்கி பொண்டிங் 365 இன்னிங்ஸ்களில் 30 சதங்களையும் சனத் ஜெயசூரிய 433 இன்னிங்ஸ்களில் 28 சதங்களையும் பெற்ற வீரர்களாவர்.

No comments