Vettri

Breaking News

மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்புக்கு மத்தியில் அசத்திய அசலன்க; இலங்கை 279




 டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டங்கில் இன்று திங்கட்கிழமை (06) நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது.







மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்புக்கு மத்தியில்   சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினார். உலகக் கிண்ணப் போட்டியில் சரித் அசலன்க குவித்த முதலாவது சதம் இதுவாகும்.  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற இரண்டாவது சதமாகும்.

ஏஞ்சலோ மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்பைத் தொடர்ந்து இலங்கை அணி அழுத்தத்தை எதிர்கொண்ட போதிலும் சரித் அசலன்க நிதானத்துடனும் வேகத்துடனும் துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்தினார்.

105 பந்துகளை எதிர்கொண்ட அசலன்க 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.

இன்றைய போட்டியை இரண்டு மாற்றங்களுடன் இலங்கை எதிர்கொண்டது.

ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக குசல் பெரேராவும் சுழல்பந்துவீச்சாளர் துஷான் ஹேமன்தவுக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வாவும் அணியில் இடம்பெற்றனர்.

எவ்வாறாயினும் குசல் பெரேரா மீண்டும் பிரகாசிக்கத் தவறினார்.

தனது துடுப்பாட்டத்தை பவுண்டறியுடன் ஆரம்பித்த குசல் பெரேரா முதலாவது ஓவரிலேயே 4 ஓட்டங்களுடன் முஷ்பிக்குர் ரஹிமிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

முஷ்பிக்குர் ரஹிம் சுமார் ஒரு மீற்றர் தூரம் இடதுபுறத்தில் உயர்வாகத் தாவி இடது கையால் எடுத்த பிடி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறந்த பிடியாக கருதப்படுகிறது.

எவ்வாறாயினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர்.

குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து ஆட்டம் இழந்தார். (66 - 2 விக்.)

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக 'இன்சைட் எஜ்' மூலம் போல்ட் ஆனார். (72 - 2 விக்.)

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் சரித் அசலன்கவும் 4ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷக்கிப் அல் ஹசன் வீசிய பந்தை முன்னால் பாய்ந்து சிக்ஸாக்க முயற்சித்து சதீர சமரவிக்ரம 41 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

மெத்யூஸ் விசித்திரமான முறையில் ஆட்டம் இழந்தார்

சதீர சமர ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் துடுப்பாட்டத்;தை ஆரம்பிப்பதற்கு முன்னரே நேரத்தை வீணடித்தார் என்பதற்காக Timed out முறையில் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் விசித்திரமான முறையில் மத்தியஸ்தரினால் ஆட்டம் இழந்தாக அறிவிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

சதீர சமரவிக்ரம ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் துடுப்பெடுத்தாடத் தயாரானபோது அவரது தலைக்கவச பட்டி அறுந்துவிட்டது.

அதனை மத்தியஸ்தரிடம் காட்டிய மெத்யூஸ் வேறு ஒரு தலைக்கவசத்தைக் கொண்டு வருமாறு தனது அணியின் மாற்று வீரருக்கு சமிக்ஞை கொடுத்தார்.

இதனிடையே மெத்யூஸ் நேரத்தை வீணடிக்கிறார் எனத் தெரிவித்து மத்தியஸ்தரிடம் ஷக்கிப் அல் ஹசன் கேள்வி எழுப்பினார். அதனைத் அடுத்து மெத்யூஸ் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் மராய்ஸ் இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார்.

தலைக்கவச பட்டி அறுந்துபோனதை திரும்பத் திரும்ப காண்பித்து தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு மத்தியஸ்தரிடம் மெத்யூஸ் கோரினார். பங்களாதேஷ் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசனிடமும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு அளிக்குமாறு மெத்யூஸ் கோரினார். ஆனால், தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் மத்தியஸ்தர்தான் தீர்மானிக்கவேண்டும் எனவும் கூறி ஷக்கிப் அல் ஹசன் நழுவிவிட்டார்.

இதனை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் பெரும் ஏமாற்றத்துடன் களம் விட்டு வெளியேறினார். பவுண்டறி எல்லையை அண்மித்துபோது தலைக்கவசத்தை உயர்த்தி அறுந்துபோன பட்டியைக் காட்டிவிட்டு பவுண்டறி எல்லைக்கு வெளியே எறிந்துவிட்டு தங்குமறைக்கு சென்றார்.

துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டம் இழந்த பின்னர் அல்லது ஓய்வுபெற்ற பின்னர்  அடுத்து களம் புகும் வீரர் 3 நிமிடங்களுக்குள் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எம்சிசி கிரிக்கெட் விதிகளில் ஒன்றாகும். ஆனால் விளையாட்டு நிலைமைகள் (Playing Conditions) 2 நிமிடங்களுக்குள் துடுப்பெடுத்தாட வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், மெத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்பதற்காக அவர் Timed out முறையில் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, கிரிக்கெட் மகத்துவத்துவத்தையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் ஷக்கிப் அல் ஹசன் பின்பற்றத் தவறிவிட்டதாக கிரிக்கெட் வர்ணனையாளர் வக்கார் யூனிஸ் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் களம் நுழைந்த தனஞ்சய டி சில்வா, 6ஆவது விக்கெட்டில் சரித் அசலன்கவுடன் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அநாவசியமாக தனது விக்கெட்டைத் தாரைவார்த்தார்.

மெஹ்தி ஹசன் மிராஸின் பந்தை நோக்கி 3 அடிகள் முன்னால் பாய்ந்து அடிக்க முயற்சித்த தனஞ்சய டி சில்வா பந்தை தவறவிட, முஷ்பிக்குர் ரஹிம் இரண்டாவது முயற்சியில் ஸ்டம்ப் செய்து அவரை ஆட்டம் இழக்கச் செய்தார்.

தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து ஆடுகளம் புகுந்த மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை விசுக்கி அடித்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

அசலன்கவும் தீக்ஷனவும் 7ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தீக்ஷனவைத் தொடர்ந்து அசலன்க உட்பட கடைசி 3 விக்கெட்கள் ஒரு ஓட்டத்திற்கு சரிந்தன.

பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

No comments