க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான (2023 கல்வியாண்டு) புதிய திகதிகள் புதன்கிழமை (4) இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 2024 ஜனவரியில் பரீட்சைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி 4ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த பரீட்சைகளில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்ச்சார்த்திகள் வெள்ளிக்கிழமை முதல் (6) எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற இணைய தளங்களுக்குள் பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகவல்களை 011 2786200 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கடந்த ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதையடுத்து இந்த திகதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளும் இதனால் தாமதமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments