ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்தை அசத்திய நியூஸிலாந்து இன்று நெதர்லாந்தை எதிர்த்தாடுகிறது
இந்தியாவில் நடைபெற்றுவரும் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட நியூஸிலாந்து, தனது 2ஆவது போட்டியில் நெதர்லாந்தை ஹைதராபாத்தில் இன்று (09) எதிர்த்தாடவுள்ளது.
இரண்டு அணிகளினதும் ஆற்றல் வெளிப்பாடுகளை ஒப்பிடும்போது நியூஸிலாந்து வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக தென்படுகிறது. ஆனால், நெதர்லாந்து அணியும் சளைத்ததல்ல என்பதை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
நெதர்லாந்து அணியைப் பற்றி நேற்றைய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட க்ளென் பிலிப்ஸ்,
'நெதர்லாந்து சிறந்த அணி என நான் எண்ணுகிறேன். உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சில திறமையான எதிரணிகளை வெற்றிகொண்டே உலகக் கிண்ண பிரதான சுற்றுக்கு நெதர்லாந்து தகுதிபெற்றது. எனவே நெதர்லாந்தை குறைத்து மதிப்பிட முடியாது. இம் முறை உலகக் கிண்ணப் போட்டியில் நெதர்லாந்தை வெற்றிகொள்வது சற்று கடினமாக இருக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்' என்றார்.
ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்ட பின்னர் நியூஸிலாந்து அணியினரின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என அவரிடம் கேட்கப்பட்டபோது,
'எமது மனங்கள் சமநிலையில் இருக்கிறது. எங்களது முதல் வெற்றியையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அடிக்கடி இந்த சுற்றுப் போட்டியில் விளையாட வேண்டியுள்ளதால் மனதை தொடர்ந்து சமநிலையில் பேணவேண்டும். வெற்றிபெறும்போது அளவுக்கு அதிகமாக துள்ளாமலும் தோல்வி அடையும்போது துவண்டுவிடாமலும் இருக்க வேண்டும். இந்த சுற்றுப் போட்டி முழுவதும் அதுதான் அவசியம் என கருதுகிறேன்' என க்ளென் பிலிப்ஸ் கூறினார்.
உபாதைக்குள்ளான முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் இன்னும் பூரணமாக குணமடையாததால் இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என குறிப்பிட்ட க்ளென் பிலிப்ஸ் பெரும்பாலும் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்றார்.
இது இவ்வாறிருக்க, பாகிஸ்தானுடனான தோல்விக்குப் பின்னர் பல துறைகளில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாக நெதர்லாந்து சகல துறை வீரர் ரோலோவ் வென் டேர் மேவ் தெரிவித்தார்.
'பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங் ஆகிய இருவரும் திறமையாக விளையாடினர். ஆனால், எமது குறைகளை நாங்கள் விரிவாக ஆராய்ந்ததுடன் எந்தெந்த விடயங்களில் முன்னேறவேண்டும் என்பதை அறிந்துகொண்டோம். அது குறித்து கலந்துரையாடி தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்த வெண்டும் என்பதில் உணர்ந்துகொண்டோம்' என்றார்.
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியை என்னவகையான திட்டங்களோடு எதிர்கொள்ளப் போகிறீர்கள் என வென் டேர் மேவிடம் கேட்டபோது,
'ஒவ்வொரு அணியும் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. எங்களது திட்டங்களை சிறப்பாக வெளிப்படுத்தி நியூஸிலாந்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்த அணியில் இருவர் (டெவன் கொன்வே, ரச்சின் ரவிந்த்ர) திறமையாக துடுப்பெடத்தாடினர். அவர்களை ஆட்டம் இழக்கச் செய்ய எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன. பலம்வாய்ந்த நியூஸிலாந்துக்கு எதிராக எவ்வாறு விளையாட வெண்டும் என்பதை அறிவோம். நாங்கள் திறமையை வெளிப்படுத்தினால் நியூஸிலாந்துக்கு அழுத்தத்தைக் கொடுத்து வெற்றிபெறமுடியும்' என பதிலளித்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நியூஸிலாந்தும் நெதர்லாந்தும் நேருக்கு நேர் நான்கு தடவைகள் மோதியுள்ளன. அந்த நான்கு தடவைகளும் நியூஸிலாந்து வெற்றிபெற்றிருந்தது.
மூன்றில் 100க்கும் மேற்பட்ட ஓட்டங்களாலும் ஒன்றில் 7 விக்கெட்களாலும் நியூஸிலாந்து வெற்றிபெற்றிருந்தது.
1996 உலகக் கிண்ண போட்டியிலேயே நியூஸிலாந்து 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இப்போது இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
அணிகள்
நியூஸிலாந்து: டெவன் கொன்வே, வில் யங், ரச்சின் ரவிந்த்ர, டெரில் மிச்செல், டொம் லெதம் (தலைவர், விக்கெட் காப்பாளர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் செப்மன், டிம் சௌதீ அல்லது லொக்கி பேர்கசன், மிச்செல் சென்ட்னர், மெட் ஹென்றி, ட்ரென்ட் போல்ட்.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மெக்ஸ் ஓ'டவ்ட், கொலின் அக்கமன், ஸ்கொட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், டேஜா நிடாமனுரு, சக்கிப் ஸுல்பிகார், ரோலோவ் வென் டேர் மேர்வ், ஏரியன் டட், போல் வென் மீக்கரன், ரெயான் க்ளெய்ன்.
No comments