தளபதி விஜய்யின் 'லியோ' அப்டேட்
தளபதி விஜய் நடிப்பில் இம்மாதம் 18ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'லியோ' திரைப்படத்தினை வெளியீட்டிற்கு முன் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் நிகழ்வு டுபாயில் நடைபெறவிருப்பதாக புதிய தகவலை படக் குழுவினர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'லியோ'. இதில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மனோஜ் பரஹாம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் எஸ். லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
இத்திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு கோடிக்கும் மேல் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த முன்னோட்டத்தில் தளபதி விஜய் பேசும் ஒரு வார்த்தை பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை என சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர், 'அது விஜய் பேசிய வார்த்தை அல்ல. லியோ படத்தின் விஜய் ஏற்றிருக்கும் பார்த்திபன் எனும் கதாபாத்திரத்தின் உணர்வு வெளிப்பாடு தான் அந்த வார்த்தை' என விளக்கமளித்திருக்கிறார். இருப்பினும் படத்தைப் பற்றிய எதிர் நிலையான கருத்துக்களை பரப்பரை செய்யும் இணையவாசிகள் விஜயை அந்த வார்த்தையை குறிப்பிட்டு பரப்புரை செய்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் பட வெளியீட்டுக்கு முன்னர் விழா ஒன்றை நடத்தியே தீர வேண்டும் என விஜய் தரப்பிலிருந்து தயாரிப்பு தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதனால் படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது ஒக்டோபர் 12ம் திகதியன்று டுபாயில் படக் குழுவினர் பங்குபற்றும் பிரத்தியேக விழாவை நடத்துவது என தயாரிப்பு தரப்பு தீர்மானித்திருப்பதாகவும், இது குறித்து இயக்குநர், விஜய், இசையமைப்பாளர்.. உள்ளிட்ட அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அனைவரும் விழாவில் பங்குபற்ற ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் நடிகர் விஜய் பட வெளியீட்டிற்கு முன்னர் ரசிகர்களை சந்தித்து, இப்படம் தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதால், இந்த விழா நடப்பது உறுதி என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments