Vettri

Breaking News

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு ஜனாதிபதி தலைமையில் தீர்வு!




 சமீப காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பேசு பொருளாகவும் சிலரது அரசியலுக்கு தீனி போடும் கருப்பொருளாகவும் காணப்பட்ட மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கான தீர்வு இன்றைய தினம் நாட்டின் கௌரவ. ஜனாதிபதி தலைமையிலான விஷேட

கலந்துரையாடலினூடாக எட்டப்பட்டது.
இது சம்பந்தமாக கடந்த காலங்களில் கௌரவ. ஜனாதிபதியுடனும் அவருடைய செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்களுடனும் தொடர்ச்சியாக
மேற்கொண்ட தொடர்பாடல்களையடுத்து இக்கூட்டமானது இன்றைய தினம் காலை 11 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்றிருந்தது.
இதன் போது குறித்த விடயம் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டது.
குறித்த மேய்ச்சல்தரை பிரதேசத்தில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக கூடாரங்களை அமைத்து அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் அவர்கள் மீது சமாதானத்திற்கு குந்தகம் விளைவிப்போர் எனும் அடிப்படையில் வழக்குத்தாக்கல் செய்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் நீதிமன்ற கட்டளை ஒன்றைப் பிறப்பித்து அவ்விடத்திலிருந்து அவர்களை உடனடியாக வெளியேற்றவும், உண்மையிலேயே அவ்வாறு காணிகளின்றி வெளி மாவட்டங்களிலிருந்து விவசாய நடவடிக்கைக்காக வருகை தந்தவர்களின் பெயர்ப் பட்டியல்களை பெற்று அவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களோ அவர்களது மாவட்டத்திலேயே தொடர்ந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் வண்ணமாக அந்த அந்த மாவட்டங்களிலுள்ள காணிகளை பகிர்ந்தளிக்க மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருந்தார்.
அதுபோன்றே பண்ணையார்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். அத்தோடு இது தற்காலிகமான தீர்வாக அமையப்பெற்றாலும் இதற்கான நிரந்தர தீர்வாக ஏற்கனவே எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களுக்கும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கொள்கைகளுக்கும் ஏற்ப்ப இரு தரப்புகளிடையே சரியான முறையில் பேச்சு வார்த்தையொன்றினை முன்னெடுத்து சரியான தெளிவூட்டல்களினூடாக நிரந்தர தீர்வுகள் எட்டப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
குறித்த விசேட கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ. செந்தில் தொண்டமான் , இராஜாங்க அமைச்சர் கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன்,இராஜாங்க அமைச்சர் கௌரவ. சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. கோவிந்தன் கருணாகரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஜனாதிபதி செயலாளர் சமன்ஏக்கநாயக்க, ஜனாதிபதி ஆலோசகரும் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வன ஜீவராசிகள் பாதுகாப்பு நாயகம், வன பாதுகாப்பு நாயகம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட மட்டக்களப்பு மாவட்ட மேலதீக அரசாங்க அதிபர் செங்கலடி பிரதேச செயலாளர், கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் போன்றோருடன் மேலும் சில முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments