சூரிய குடும்பத்தின் உருவாக்க மாதிரி: புதிய சாதனை படைத்த நாசா
சூரிய குடும்பத்தில் உள்ளதாக அறியப்படும் மிகவும் ஆபத்தான பாறையின் தூசிகள் படிந்த மாதிரிகளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான நாசா வெற்றிகரமாக பூமிக்கு கொண்டுவந்து சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்த மாதிரிகளை சேகரித்த விண்கலம் உட்டா மாநிலத்தின் மேற்கு பாலைவனப் பகுதியில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
ஒசைரிஸ்-ரெக்ஸ் என்ற விண்கலத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டில் பென்னு என்ற சிறுகோள் மேற்பரப்பில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன.
சிறுகோளின் மாதிரிகளின் ஆய்வு
அடுத்த 300 ஆண்டுகளில் பூமியை தாக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் குறித்த , மலைப்பாங்கான சிறுகோளை பற்றி மேலும் அறியும் வகையில் நாசா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதனைத் தவிர 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான சூரிய குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் உலகில் வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய புதிய நுண்ணறிவுகளை குறித்த சிறுகோளின் மாதிரிகளை ஆய்வு செய்வதன் ஊடாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தரையிறக்கம்
இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பாலைவன நிலத்தில் திட்டமிட்ட நேரத்திற்கு 3 நிமிடங்கள் முன்னதாக மாதிரிகளை சேகரித்த விண்கலம் தரையிறங்கியுள்ளது.
காரின் சக்கரம் அளவான குறித்த கொள்கலன் விண்கலமானது பூமியின் வளிமண்டலத்திற்குள் செக்கனுக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் உள்நுழைந்திருந்தது. அதன்பின்னர் விண்கலத்தில் பொருத்தப்பட்ட பரசூட் மூலம் இறங்கும் வேகம் குறைக்கப்பட்டு, தரையில் மெதுவாக தரையிறக்கப்பட்டுள்ளது.
No comments