காவல்துறையினரின் கைத்துப்பாக்கி மாயம்
கொட்டாஞ்சேனை காவல்துறையினரின் கைத்துப்பாக்கி ஒன்று நேற்று முன்தினம் (26ஆம் திகதி) முதல் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, கீழ்நிலை சேவை கடமைகளை பொறுப்பேற்க வந்த உத்தியோகத்தரால், இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை
காணாமற்போன குறித்த துப்பாக்கி, அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்டதாக உரிய புத்தகங்களில் பதிவு எதுவும் இல்லை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் (26ம் திகதி) காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடிக்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர சோதனை நடத்தினர்.
காவல்துறை கான்ஸ்டபிள் மீது சந்தேகம்
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் விசேட காவல்துறை குழுவொன்று நேற்று (27) கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவரா என்பது தொடர்பில் விசாரணைக் குழுக்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
No comments