துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயம் : அம்பலாந்தோட்டையில் சம்பவம்
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாந்தோட்டையில் இருந்து பயணித்த பஸ் ஒன்றில் இருந்த பெண் ஒருவர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பலாந்தோட்டை, மடயமலல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த பஸ்ஸினை நிறுத்தி அதில் பயணித்த பெண்ணொருவர் மீது இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பலத்த காயமடைந்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் கடந்த 3 மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இவற்றுள் மேல் மாகாணத்தில் மாத்திரம் 16 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், தென்மாகாணத்தில் 10 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 9 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் போதைப்பொருள் வர்த்தகம், பாதாளக்குழு செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகள் துப்பாக்கிச்சூடு மற்றும் கொலை இடம்பெற வழிவகுக்கின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments