திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்குவதில்கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார். - இம்ரான் எம்.பி
கிழக்கு மாகாண கல்வித்துறையினரால் திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு இழைக்கட்டு வரும் அநீதியைக் கழைந்து நியாயம் வழங்குவதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்தைத் தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கிழக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கு போதுமானளவு அல்லது மேலதிக ஆசிரியர்கள் இருப்பதாக் குறிப்பிடப்படுகின்ற போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனை சமப்படுத்தி இக்குறையைப் போக்கவுள்ளதாக கிழக்கு ஆளுநர் உறுதியளித்திருந்தார்.
கிழக்கு ஆளுநராக கடமையேற்று 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் இந்த ஆசிரியர் சமப்படுத்தல்களை அவரால் செய்ய முடியவில்லை. இந்த விடயத்தில் அவர் உறுதியளித்த காலங்களும் கடந்து விட்டன. இதனால் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதுடன், இம்மாவட்ட மாணவர்களுக்கு கற்றலில் சமவாய்ப்பு வழங்குவதில் கிழக்கு ஆளுநர் தோல்வி கண்டுள்ளார் என்று கருத வேண்டியுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் மூலம் திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரிடம் எனது கோரிக்கையை விடுத்திருந்தேன்.
கிழக்கில் போதுமானளவு ஆசிரியர்கள் அல்லது மேலதிக ஆசிரியர்கள் இருப்பதால் சமப்படுத்தல்கள் மூலம் திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் என அப்போது எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டார்கள்.
எனினும், இதுவரை திருகோணமலை மாவட்ட ஆசிரிய பற்றாக்குறை நிவரத்திக்கப்படவில்லை. இதனால் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் அதேவேளை இம்மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்களும் வேறு மாகாணங்களுக்கு நிமிக்கப்பட்டதால் பெரும் சிரமங்களையும் அனுபவித்து வருகின்றனர் என்று திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
No comments