இரண்டாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது வியாழக்கிழமை (07) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
உத்தியோக பூர்வமாக புதன்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டு புதை குழியிலுள்ள மண் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (07) காலை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் அகழ்வு பணியானது புதன்கிழமை (6) ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவ இடத்தில் நிலைமைகளை அவதானிப்பாளர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கடந்த 2023.06.29 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் நேற்றையதினம் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
No comments