Vettri

Breaking News

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக உலகக் கிண்ண குழாத்தில் பெயரிடப்படுவார்..




 உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்க பூரண குணமடையாததால் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அவர் சிறுக சிறுக தேறி வருகின்ற நிலையில் அவரது உடற்தகுதி குறித்து அவதானித்து வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை ஹசரங்க பூரண உடற்தகுதியைப் பெற்றால் அவர் பதில் வீரராக கணிக்கப்படுவார் எனவும் இலங்கை வீரர்களில் எவரேனும் உபாதைக்குள்ளானால் அவர் மாற்று வீரராக அணியில் இணைக்கப்படுவார் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

இலங்கை குழாம் இன்று புதன்கிழமை (27) பிற்பகல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் இந்தியா சென்றடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இந்திய ஆடுகளங்களில் திறமையாக துடுப்பெடுத்தாடக்கூடியவர் என தெரிவிக்கப்பட்ட ஏஞ்சலோ மெத்யூஸ், உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்படவில்லை.

மாறாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை குழாத்தில் இடம்பெற்ற பெரும்பாலானவர்கள் உலகக் கிண்ண குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

வனிந்து ஹசரங்கவை விட உபாதைக்குள்ளான மற்றொரு வீரரான வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீரவும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

ஆசிய கிண்ண கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்ற ப்ரமோத் மதுஷான், பினுர பெர்னாண்டோ ஆகியோர் நிக்கப்பட்டு லக்ஷான் மதுஷன்க, லஹிரு குமார ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாத்தில்  பயணிக்கும் பதில் வீரராக சாமிக்க கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கை அணித் தலைமையில் மாற்றம் இடம்பெறவேண்டும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதிலும் தசுன் ஷானக்க மீது தெரிவாளர்கள் நம்பிக்கை வைத்து அவரிடம் தொடர்ந்து தலைமைப் பதவியை விட்டுவைத்துள்ளனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளான மஹீக் தீக்ஷன பூரண குணமடைந்ததை அடுத்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.





இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டியில் திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக குசல் பெரேரா ஆரம்ப ஜோடியாக பெத்தும் நிஸ்ஸன்கவுடன் இணைவார் என அறிவிக்கப்படுகிறது.

இதனைவிட துடுப்பாட்ட வரிசை 7ஆம் இலக்கம் வரை ஆசிய கிண்ணத்தில் போன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் ஜனித் பெரேரா  (வி.கா.), திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (வி.கா.).

சகலதுறை வீரர்கள்: சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித் தலைவர்), துஷான் ஹேமன்த.

பந்துவீச்சாளர்கள்: லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண, கசுன் ராஜித்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே.

No comments