ஓட்டமாவடியில் விபத்து : 12 வயது மகள் உயிரிழப்பு, தந்தை படுகாயம்
ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (8) காலை 9 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் வைத்து இடம்பெற்றுள்ளது.
காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய அப்துல் கபூர் முகம்மட் கலீல் என்பவர் தனது 12 வயதுடைய மகளை மோட்டார் சைக்கிளில் மாவடிவேம்பு நோக்கி ஏற்றிச் செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை பகுதியில் இருந்து வந்த பஸ் வண்டி தந்தை, மகள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்த சிறுமி காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் பாத்திமா றியா எனும் மாணவியாவார்.
இந்த விபத்துச் சம்பவத்தில், படுகாயமடைந்த தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments