இஸ்ரேலில் பணியாற்ற இலங்கை தாதியர்களுக்கு வாய்ப்பு
சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் இஸ்ரேலின் PIBA நிறுவனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 505 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் இஸ்ரேலில் தாதியர் பணிக்காக செல்லவிருப்பதோடு, மேலும் 25 இலங்கையர்களுக்கும் விமானப் பயனச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 25 பேர் கொண்ட குழுவில் 24 பெண்களும் ஒரு ஆணும் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் (ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி) செனரத் யாப்பா மற்றும் பலர் விமான பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்கான பணியாளர்களை விரைவாக அனுப்புவது தொடர்பாக அந்நாட்டின் PIBA நிறுவனத்துடன் கலந்துரையாடியதுடன், சிறிலங்காவிலிருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சிறிலங்காவின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைகள் கிடைக்கின்றன.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக எந்தவொரு வெளிநாட்டவருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments