குருந்தூர்மலைப் பொங்கலை பொலிசாரும், சாந்தபோதிதேரரும் குழப்ப முயற்சி; தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்றது பொங்கல் வழிபாடு...
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் பொலிசார் மற்றும் கல்கமுவ சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளுக்கு மத்தியில் சைவத் தமிழ் மக்களால், தொல்பொருள் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மிகச் சிறப்பாக (18)நேற்று, பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை வெளிமாவட்டங்களிலிருந்து பெருந்திரளான பெரும்பாண்மை இனத்தவர்கள் பேருந்துகள் மூலம் அழைந்துவரப்பட்டு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையினை மீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையில், பௌத்த வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந் நிலையில் குருந்தூர்மலைக்குச் செல்லும் வழிகளிலும், குருந்தூர்மலையைச் சூழவும் பாரிய அளவில் பொலிசார், கலகம் அடக்கும் பொலிசார் மற்றும், பொலிஸ்விசேடஅதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அந்தவகையில் குருந்தூர்மலைக்கு பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெரும்பாண்மையினத்தவர்கள் குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி அமைக்கப்பட்ட பௌத்த விகாரையில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி பாரிய சத்தத்தினை ஏற்படுத்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறான சூழலில் பொங்கல் வழிபாட்டிற்கு உழவியந்திரத்தில் எடுத்துவரப்பட்ட பொங்கல் பொருட்களை இடைமறித்த பொலிசார் உள்ளே செல்லமுடியாதென வழிமறித்திருந்தனர்.
அப்போது அங்கு சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிசாரோடு பேசியதைத் தொடர்ந்து பொங்கல் பொருட்களை குருந்தூர் மலை அடிவாரப்பகுதிக்கு எடுத்துச்செல்ல பொலிசார் அனுமதித்திருந்தனர்.
தொடர்ந்து பொங்கல் பொருட்கள் குருந்தூர்மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டு,பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்பட்டு, நிலத்தில் கற்கள் வைக்கப்பட்டு அதன்மேல் தகரம் வைக்கப்பட்டு, அதன்மேல் மூன்று கற்கள் வைக்கப்பட்டு, விறகுகள்பரப்பப்பட்டு தீமூட்டி பானைவைக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டது.
இந் நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தரப்பினர், தாம் மற்றுமொரு இடத்தில் பொங்கல் பொங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது தொல்லியல் திணைக்களத்தினால் அந்த முயற்சி தடுக்கப்பட்டிருந்தது. அதன்போது தொல்லியல் திணைக்களத்திற்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களுக்குமிடையில் வாக்குவாதங்களும் இடம்பெற்றன.
அத்தோடு அங்கு தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக தமிழ் மக்களால் வாழையிலை வைக்கப்பட்டு அதில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூக்கள் என்பன வைக்கப்பட்டு சைவ முறைப்படி மடை பரவுதல் செயற்பாடும் செய்யப்பட்டது.
அப்போது தமிழ் மக்கள் பொங்கல் வழிபாட்டில் ஈடுபடும் பகுதிக்கு வருகைந்த கல்கமுவ சாந்தபோதி தேரர், மடைபரவியது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார், இதனால் கோபமடைந்த தமிழ் மக்கள் தேரரை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கூச்சலிட்டிருந்தனர். அப்போது அங்கு சிறிது குழப்பமான சூழல் நிலவியது. பின்னர் பொலிசாரின் தலையீட்டுடன் நிலைமை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
தொடர்ந்து பொங்கலும் அங்கு படையலிடப்பட்டு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் திரிசூலம் இருந்த வளாகத்தினைச் சுற்றி வலம்வந்து, பக்தி பாசுரங்கள் பாடி சைவத் தமிழ் மக்களால் மிகச் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தப் பொங்கல் வழிபாடுகளில்ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூகசெயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments