சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்
ICC ஆடவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று நேற்று (26) நிறைவுக்கு வந்தது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்று வெற்றி கொண்டு முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று 3ஆவதும் இறுதியுமான போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஒரு நாள் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே தொடரை பாகிஸ்தான் 3 – 0 என வெற்றி கொண்டால் ஐசிசியின் அணிகளுக்கான ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதற்கமைய, 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 3 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதம் நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் 4 போட்டிகளை வெற்றி கொண்டு, பாகிஸ்தான் அணி வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தனதாக்கியது.
ஆயினும் அத்தொடரின் 5ஆவது போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக முதலாம் இடம் பறிபோயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments