33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!.
வலிகளால் முழுவதுமாக நிரப்பப்பட்டு நிரம்பிக்கிடக்கும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வழிநெடுகிலும் சிறிலங்காவின் அரச படைகளாலும் அதன் துணை இராணுவக் குழுக்களாலும் நிகழ்த்தப்பட்ட ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த நிகழ்வாகிப்போனது காலத்தின் மிகப்பெயரியதொரு துயரம் எனலாம்.
அந்த பட்டியலில் மிக கொடூரமான முறையில் ஈழத்தினுடைய கீழைக்கரையில் அம்பாறை மாவட்டத்தில் இன்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலைகளும் மிக முக்கியமானவையாக பதிவாகிறது.
மனித உயிர் என்று சொல்லப்படுவது விலைமதிப்பற்றது என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் மனித சமூகம் மிருகத்தனமாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஓரங்கமாக கடந்த 1990ஆம் வருடம் எட்டாவது மாதத்தின் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை எனும் கிராமத்திலும் அதன் அயல் கிராமங்களிலும் துணை இராணுவக்குழுவான ஊர்காவல்படையினரால் கண்மூடித்தனமாக இப்படுகொலைகள் நிகழ்த்திமுடிக்கப்பட்டது .
230இற்கும் அதிகமானோர்
காற்றுத்தும் காலவெளிகள் முழுவதிலும் இரத்த வாடை பரவிக்கிடந்த இம்மனிதப்படுகொலைகள் ஈழத்தின் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதும் அதனை நிகழ்த்தியது இலங்கைத்தீவின் மற்றுமொரு சிறுபான்மை இனக்குழு என்பதுமே வரலாற்று வேதனையாக படர்ந்து தொடர்வதாக இன்றுவரை அங்கு வாழும் பேசும் மனித சாட்சியங்களும் பிரதேச மக்களும் அங்கலாய்க்கின்றனர்.
வீரமுனை மற்றும் அதனை சூழவுள்ள வீரச்சோலை, மல்லிகைத்தீவு , மல்வத்தை , வளத்தாப்பிட்டி , சொறிக்கல்முனை ஆகிய கிராமங்களில் சுமார் 400இற்கும் அதிகமானவர்கள் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் தாக்கப்பட்டதாகவும் அவர்களில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 55 பேர் கொல்லப்பட்டதாக தரவுகள் வெளியிடப்பட்டபோதும் குறித்த தினத்தில் அப்பிரதேசத்தின் சிந்தா யாத்திரைப்பிள்ளையார் கோவில் வளாகம் மற்றும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளாகம் ஆகியவற்றில் சுமார் 230 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
33 ஆண்டுகள் கடந்தும்
காலங்காலமாக கடந்து போக முடியாத வரலாற்று வலிகளாக நீறுபூத்த நெருப்பாகி தமிழர்களின் உள்ளங்களில் இன்றுவரை எரிந்துகொண்டிருக்கும் வரலாற்று வடுக்களான இப் படுகொலைகள் தாயக நிலப்பரப்பின் பல இடங்களில் இடம்பெற்று இன்றுவரை மறுக்கப்பட்ட நியாயங்களின் பட்டியலில் கிடப்பில் போடப்பட்டிருப்பதைப்போலவே வீரமுனைப் படுகொலையும் 33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே பதிவாகி நிற்கின்றது.
வீரமுனை பிரதேசத்தில் சுடுகலன்களின் ரவைகளுக்கும் கூர்வாள் முனைகளுக்குமாக கொலை செய்யப்பட்டு உயிர்பறிக்கப்பட்ட அத்தனை உறவுகளையும் ஐபிசி தமிழ் இன்றைய நாளில் நினைவுகூருகின்றது.
No comments