தெஹிவளையில் 30 வயது நபர் மீது துப்பாக்கிச்சூடு!!!
வேறொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சம்பவமென சந்தேகம் தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஓபன் பிளேஸ் பிரதேசத்தில் உள்ள மீன்பிடி வீட்டுத் தொகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபர் காயமடைந்துள்ளமை தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெஹிவளை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி, வீட்டின் முன்னால் உள்ள வீதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு நின்றிருந்த வேளையில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எவரையாவது குறி வைத்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்துப்பாக்கிச் சூடு யாரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என்பதோடு, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments