Vettri

Breaking News

பாராளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூடவுள்ளது




பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கடந்த 11ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழான 2324/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன விவாதிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது. ஓகஸ்ட் 23ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2336/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2336/71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2343/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2339/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான காலப் பகுதியில் ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 24ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 5.30 மணி வரை இலங்கை கிரிக்கெட நிறுவனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும். ஓகஸ்ட் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.ஏ.ஆர். மத்துமபண்டார, கெளரவ பி. சிறிசேன குரே மற்றும் கௌரவ சங்கைக்குரிய உடவத்தே நந்த தேரர், முன்னாள் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை இடம்பெறவுள்ளது. மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments