ஈகைப்பெருந்தீ செங்கொடியின் 12 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று..
தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் இப்படிக்கு தோழர் செங்கொடி என்ற இறுதி வாக்குமூலத்துடன் தனது இன்னுயிரை தமிழ் தேசியத்தின் பாலும் அதன் வடிவங்களின் மீதும் கொண்ட பற்றுறுதிக்காகவும் எரிகின்ற தீயின் பசித்த நாவிற்கு அர்ப்பணம் செய்தார் செங்கொடி.
மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும் என்ற கோரிக்கையோடு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண ண்டனையை ரத்துச் செய்யக்கோரிய போராட்டத்தில் உச்ச வடிவமாக கடந்த 2011 ஆம் வருடம் இதே போன்றதொரு நாளில் தீங்குளித்து தனது இன்னுயிரை நீத்தார்.
தேசிய பற்று என்பதும் இனமான உணர்வென்பதும் பிறப்பின் வழி தொடர்ச்சி எனலாம்.
போராட்டாங்களின் இறுதி வடிவம்
அதன்படி இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்துக்கு அருகில் ஓரிகை எனும் கிராமத்தைச் சேர்ந்த செங்கொடி பரசுராமன் என்ற காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பினுடைய உறுப்பினரான செங்கொடி தொடர் போராட்டாங்களின் இறுதி வடிவமாக தன்னையே நெருப்பிற்கு அர்ப்பணிக்கத் துணிந்தார்.
கடந்து வந்த காலங்களின் ஈழத் தமிழர்களின் மிகநீண்ட உரிமைப்போரின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் பலர் விலைமதிக்க முடியாத தியாகங்களை செய்துள்ளனர்.அந்த வரிசையில் இணைந்துகொண்ட ஈகைப்பெருந்தீ செங்கொடி எனும் தமிழச்சியின் 12 வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி வீரமங்கை செங்கொடி தன்னையே ஈகம் செய்யத் துணிந்தமை தமிழகம் மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழுந்தேசங்கள் தோறும் பேரெழுச்சியை ஏற்படுத்தியது.
வரலாற்றின் பக்கங்கள் பல வலிகளை சுமந்தபடி எழுதப்பட்டிருந்தாலும் அந்த வலிகளைத் தாண்டி வரலாற்றையே உறையச்செய்து இரத்தக் கண்ணீர் வடிக்கச்செய்த ஓர் நிகழ்வாக 27 அகவைகள் நிரம்பிய செங்கொடியின் தற்கொடை பதிவானது.
அன்றைய நாளில் வீரமங்கை செங்கொடி தன் உடலில் மூட்டிய தீ இன்று பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈழத்தமிழர்களின் போராட்டத்தோடு மிக நெருங்கியதான இச்சம்பவத்தினூடாக ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றிலும் தனது பெயரை தனித்துவமாக பதிவு செய்துகொண்டார்.
No comments