இலங்கை - இந்திய இணைவால் ரணில் போட்டுள்ள திட்டம்
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாது, உலகில் உள்ள அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளும் பிராந்திய கூட்டாண்மை மூலம் அந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய - இலங்கை உறவுகளை மேம்படுத்தி இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அதிபரின் வேலைத்திட்டமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரின் இணக்கப்பாடு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் மற்றும் “இந்திய - இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் தொலைநோக்குப் பார்வை” குறித்து இன்று (22) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் அதிபரோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வலியுறுத்திய அமைச்சர், இந்தச் செயற்பாடுகளை பூரண புரிந்துணர்வுடனும் அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடனும் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
No comments