Vettri

Breaking News

உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் மேலும் முறைமைப்படுத்தப்பட வேண்டும் - கோப் குழு




பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.07.20 ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள 'உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி சபை' அழைக்கப்பட்டிருந்தது. சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களில் பொதுமக்கள் பயன்பாடு சேவைகளை நடாத்திச் செல்வதற்கு சலுகை வட்டியில் நிதி வசதிகளை வழங்கும் நோக்கில் 1916 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க கட்டளைச் சட்டம் மூலம் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து குறித்த சட்டம் பலமுறை திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 1993 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க சட்டத்துக்கு அமைய உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்போது நிறுவனத்தின் 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையுடன் சம்பந்தப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. • சட்டத்தைத் திருத்துவதன் அவசியம் இது வங்கியொன்றுக்கு ஒப்பான நிதி நிறுவனம் என்பதால் காலத்துக்கு ஏற்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சட்டத்தை திருத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சட்டத்துக்கு அமைய அமைச்சின் செயலாளரே தலைவராக செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதால் அந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி திருத்தம் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். 2018 இல் ஆசிய மன்றத்தினால் நிறுவனத்தை மீள்கட்டமைப்பு செய்வது தொடர்பில் அறிக்கையொன்று வழங்கியிருந்ததாகவும், அதற்கமைய செயற்பட்டிருந்தால் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்க வாய்ப்பிருந்ததாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொடுள்ள பின்னணியில் இது தொடர்பான உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. • பணிப்பாளர் நாயகம் மற்றும் உள்ளகக் கணக்காய்வாளர் ஆகிய பதவிகளை முழுநேர நிரந்தரப் பதவிகளாக மாற்றுவதன் தேவை பல வருடங்களாகப் பணிப்பாளர் நாயகம் பதவி பதில் பதவியாகக் காணப்படுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், நிரந்தரத்தமான உள்ளகக் கணக்காய்வு அதிகாரி இல்லாமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, நிரந்தரப் பணிப்பாளர் நாயகம் மற்றும் முழு நேர நிரந்தர உள்ளகக் கணக்காய்வு அதிகாரியை நியமிப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை இரண்டு வாரங்களில் அறிவிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டது. • கடன் வழங்குதல், வேலைத்திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் கடன்களை அறவிடுதல் என்பவற்றுக்கு முறையான வழிமுறை இல்லாமை 2023 ஆம் ஆண்டில் 249 மில்லியன் ரூபாய் பெறுமதியான 9 வேலைத்திட்டங்கள் நிதியத்துக்குக் கிடைக்கப்பெற்றிருந்தாலும், இதுவரை பணிப்பாளர் சபை கூடி அது தொடர்பில் கருத்திற்கொள்ளவில்லை என்பது புலப்பட்டது. அதற்கமைய, கடன் வழங்குதல் மற்றும் மீள அறவிடுதல் தொடர்பான அளவுகோல்கள், கடன்களை மீள அறவிடுவதன் இயலுமை, கடன்களை பயன்படுத்தும் வேலைத்திட்டங்கள் மற்றும் வினைத்திறன் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி முறையான வழிமுறை மற்றும் வழிகாட்டலை தயாரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. அந்த வழிமுறைக்கு அமைய கடன் வழங்கும் குழு செயற்படுவதன் அவசியம் குழுவினால் வலியுறுத்தப்பட்டது. • ஒவ்வொரு மாகாணங்களுக்கும் கடன்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறைமையை சீராக்குவதன் அவசியம் 2021 இல் கடன் வழங்கப்பட்டுள்ள 847.7 மில்லியன் ரூபாயில் 691 மில்லியன் ரூபாய் வடமேல் மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் வெளிப்படுத்தினர். வேலைத்திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் போது ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் முறைமையை சீரமைக்குமாறு குழு பரிந்துரைத்தது. • உள்ளகக் கணக்காய்வை சீரமைத்தல் உள்ளகக் கணக்காய்வை முறையாக மேற்கொள்ள உள்ளகக் கணக்காய்வு அதிகாரி ஒருவர் இல்லாமை காரணமாக கடந்த ஆண்டுகளில் சரியாகக் கணக்காய்வு இடம்பெறாமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நிரந்தர உள்ளகக் கணக்காய்வு அதிகாரியொருவரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் 2011, 2012 ஆகிய ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகளை ஒரு மாத காலத்துக்குள் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், தேசியக் கணக்காய்வு ஆணைக்குழுவின் பரிந்துரையை செயற்படுத்தடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. 2019-2023 ஐந்தாண்டு காலத்துக்கான கூட்டுத்திட்டத்தை தயாரித்திருந்தாலும் அதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமை சிக்கலுக்குரியது என இதன்போது இணங்காணப்பட்டது. அதற்கமைய, 2023-2028 வரையான கொட்டுத்திட்டத்துக்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. 1995 இல் பல் பயிர் அபிவிருத்தித் திட்டத்தின் தம்புள்ளை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட 12 மில்லியன் ரூபாய் நிதி, கண்டி மாநகர சபைக்கு வழங்கப்பட்ட 60.9 மில்லியன் ரூபாய் நிதியை மீள அறவிடாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக அந்தப் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கும் ஒரே நிறுவனமான நிதியத்தின் செயற்பாடுகள் மேலும் வினைத்திறன் அடைய வேண்டும் என கோப் குழுவின் தலைவரினால் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இன்னும் ஆறு மாதங்களில் இந்த நிறுவனத்தை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எஸ்.எம். மரிக்கார், கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments