Vettri

Breaking News

மறைக்க வேண்டியதில்லை : இலங்கையின் களத்தடுப்பில் தீவிர முன்னேற்றம் தேவை - கிறிஸ் சில்வர்வூட்




நெவில் அன்தனி) 'மறைக்க வேண்டியதில்லை, இலங்கைக்கு குறிப்பாக களத்தடுப்பில் தீவிர முன்னேற்றம் தேவை. பாகிஸ்தானிடம் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது போட்டியில் திறமையை வெளிப்படுத்த உறுதிபூண்டுள்ளது' என இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். எவ்வாறாயினும் மூன்று துறைகளிலும் இலங்கை முன்னேற வேண்டும் எனவும் அவர் கூறினார். எஸ்.எஸ்.சி. மைதானத்தில் திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாளைக்கு முன்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார்.இதேவேளை, காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். முதல் இன்னிங்ஸில் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்த இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 99 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. இது இலங்கையின் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது எனலாம். 'சில அம்சங்களில் நாங்கள் முன்னேற வேண்டும். களத்தடுப்பும் அதில் ஒன்றாகும். இதனை மறைக்கத் தேவையில்லை. எமது களத்தடுப்பை முன்னேற்ற வேண்டும். நேர்மையாக கூறுவதென்றால், மூன்று துறைகளிலும் எமது அணியினர் திறமையைக் காட்ட எட்டவில்லை' என அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டில் இலங்கை குறைந்தது 3 முக்கிய பிடிகளைத் தவறவிட்டது. இதுவும் இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.புதிய ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியின் ஆரம்பம் இலங்கைக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளபோதிலும் அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற அவா இலங்கைக்கு நிறையவே இருக்கிறது. 'அதற்கான உந்துதல் இருக்கவே செய்கிறது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெறவேண்டியதன் அவசியத்தை வீரர்கள் அறிவார்கள். அதுவும் சொந்த நாட்டில் வெற்றிபெறவேண்டும் என்பதில் விரர்கள் குறியாக இருக்கின்றனர். அதற்கான உந்துதலை தொடர்ந்து பேணவேண்டும்' என கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இலங்கை தனது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிப்பதாக இருந்தால் ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்ளவேண்டும் என்பதை சில்வர்வூட் வலியுறுத்தினார். இலங்கை அணியில் மீண்டும் அசித்த பெர்னாண்டோ சுகவீனம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இடம்பெறாமல் இருந்த அசித்த பெர்னாண்டோ 2ஆவது போட்டிக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார். அவர் 2ஆவது போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவருடன் டில்ஷான் மதுஷன்க வேகப்பந்து வீச்சில் இடம்பெறுவார் என நம்பப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் இலங்கை வேகப்பந்துவீச்சில் முக்கிய விரராக இடம்பெற்ற அசித்த பெர்னாண்டோ 11 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.இதேவேளை, இலங்கை துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அணி முகாமைத்துவம் திங்கட்கிழமை காலையிலேயே எதையும் தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. இலங்கை குழாம் திமுத் கருணாரட்ன (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிஷான் மதுஷ்க, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த, ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, லக்ஷித்த மனசிங்க.

No comments