Vettri

Breaking News

ஒழுங்கீன நடத்தைக்காக இந்திய மகளிர் அணித்தலைவிக்கு அபராதம்!!




பங்களாதேஷ் மகளிர் அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் ஒழுங்கீனமான முறையில் செயற்பட்ட இந்திய மகளிர் அணித் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அபராதம் விதித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும் 2 ஆவது போட்டியில் இந்திய அணியும் வென்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 3 ஆவது போட்டியில் இரு அணிகளும் தலா 225 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 3 ஆவது போட்டியும், சுற்றுப்போட்டியும் சமநிலையில் முடிவடைந்தன. 3 ஆவது போட்டியில் மத்தியஸ்தர்களின் தீர்ப்புகள் குறித்து இந்திய மகளிர் அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் கடும் அதிருப்தியடைந்தார். எல்.பி.டபிள்யூ முறையில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்ததாக மத்தியஸ்தர் அளித்த தீர்ப்பினால் ஆத்திரமடைந்த அவர், விக்கெட்டை துடுப்பினால் தாக்கிவிட்டு திட்டிக்கொண்டே மைதானத்திலிருந்து வெளியேறினார். இத்தொடர் 1:1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரு அணியினரும் வெற்றிக்கிண்ணத்துடன் போஸ் கொடுத்தபோது, 'மத்தியஸ்தர்களையும் கூப்பிடுங்கள'; என பங்களாதேஷ் அணித் தலைவி நைகர் சுல்தானாவிடம் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார். "நீங்கள் ஆட்டத்தை சமநிலையடையச் செய்யவில்லை. மத்தியஸ்தர்கள்தான் உங்களுக்காக அதைச் செய்தார்கள். நாங்கள் அவர்களுடன் படம்பிடித்துக்கொள்வது நல்லது" என ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார். இதனால், பங்களாதேஷ் அணியினர் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தனர். ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்நடவடிக்கைகளுக்கு பலரும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிப்பதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளது. ஐ. அத்துடன் அவருக்கு 3 எதிர்மறை புள்ளிகளையும் ஐசிசி வழங்கியுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மதன்லால் வலியுறுத்தியுள்ளார்.

No comments