Vettri

Breaking News

நாட்டில் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய சட்டம் - மத அலுவல்கள் அமைச்சர்




 நாட்டில் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்படவுள்ளதாக புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  புதன்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும் சில சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் ஏற்படக் கூடிய நிலைமை காணப்படுகிறது. அவ்வாறான நிலைமைகள் எவையும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை சமூகத்திலிருந்து போக்கும் வகையிலேயே இந்த சட்ட மூலம் தயாரிக்கப்படுகிறது.

அதேபோன்று ஜனநாயகத்துக்கோ அல்லது மத சுதந்திரத்துக்கோ பாதிப்புக்களை ஏற்படுத்துவதை இதன் ஊடாக தவிர்க்க முடியும். எந்தவொரு மதத்தைப் பின்பற்றுபவருக்கும் பிரிதொரு மதத்தை நிந்திக்கும் உரிமை கிடையாது.

அண்மையில் பௌத்த, இந்து மற்றும் இஸ்லாம் மதங்களை நிந்திக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் என்ற நபர் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர் நாட்டுக்கு வந்தவுடன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எனினும் அவற்றை தற்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்றார்.


No comments