பாராளுமன்ற குழுக் கூட்டங்களுக்கு பொறுப்பாக பதவி வகிப்போர் செல்வது பொருத்தமற்றது - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு
பாராளுமன்ற குழு கூட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், சபை முதல்வர் ஆகியோர் செல்வது பொருத்தமற்றது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றம் புதன்கிழமை (5) காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில், சபாநாயகர் அறிவிப்பிலேயே இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
2023.06.29 அன்று நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டதாகவும், இதன்போது அவருக்கு கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஆகியோரால் 2023.06.30 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின்போதும் 2023.07.01 அன்றைய பாராளுமன்ற சபையிலும் எனது கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அது தொடர்பில் என்னிடம் தீர்மானமொன்றை கோரியிருந்தனர்.
இது தொடர்பில் நிலையியல் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற மரபுகள் என்னால் ஆராயப்பட்டது. அதற்கமைய, பாராளுமன்ற சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு பாராளுமன்ற கட்டமைப்புக்குள் சிறப்புரிமைகள் காணப்படுகின்றமையினாலும், இந்தப் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்கு குழுக்களின் அலுவல்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஒரு பரந்த இடம் காணப்படுகின்றமையினாலும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு நிலையியல் கட்டளைகள் 121(1)இன் பிரகாரம், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாலும், இவ்வாறான கூட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது மேலே குறிப்பிடப்பட்ட பொறுப்பான பதவி வகிப்பவர்களை அழைப்பது பொருத்தமற்றது.
இதனால் குறித்த கூட்டத்தின் தகவல்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்க குழுவின் தலைவரினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
No comments