நஸீர் அஹமட்டுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர்!!
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்து, பிரச்சினையை சுமூகத்துக்குக் கொண்டுவந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அம்மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய அபிவிருத்திக் குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் காணப்படாத விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கேள்வி எழுப்பி, அரச அதிகாரிகளுக்கு தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்திய சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் மீது, கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இன்றைய கூட்டத்தின் போது, நிகழ்ச்சி நிரலில் காணப்படாத விடயங்கள் தொடர்பான தரவுகள் குறித்த கேள்விகளை, கல்வி அமைச்சின் செயலாளரிடம் அமைச்சர் நஸீர் அஹமட் எழுப்பினார்.
இதன்போது, அந்தத் தரவுகள் தற்போது தன்வசம் இல்லை என்றும் இன்று மாலை வேளைக்குள் அவற்றை அமைச்சரிடம் கையளிக்க ஏற்பாடு செய்வதாகவும் செயலாளர் தெரிவித்தார்
இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளரைக் காரசாரமான வார்த்தை ஜாலங்களால் தாக்க முற்பட்ட போது குறுக்கிட்ட ஆளுநர் தரவுகளை உடனடியாக எவ்வாறு வழங்க முடியும் என்றும் மாலை வேளைக்குள் அவற்றை வழங்க ஏற்பாடு செய்யுமாறு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். இருப்பினும், அமைச்சர் அவ்விடயம் தொடர்பில் செயலாளர் மீது தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டே இருந்தார்.
இதனையடுத்து, அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அபிவிருத்திக் குழுத் தலைவர் சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், இரா.சாணக்கியன் ஆகியோரும், நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத விடயங்கள் தொடர்பான தரவுகளைக் கேட்டு அரச அதிகாரிகளை தொந்தரவுக்கு உட்படுத்துவது நாகரிகமற்ற செயல் என்றும் அந்தத் தரவுகளை வழங்க செயலாளருக்கு கால அவகாசம் வழங்குமாறும் அறிவுறுத்தியதோடு கடும் விமர்சனத்துக்கும் உள்ளாக்கினர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், இவ்வாறான உயர்ந்தபட்ச சபையில் அனைவரும் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியதுடன், அரச அதிகாரிகளின் கண்ணியத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் அரச அதிகாரிகள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், நிகழ்ச்சி நிரலில் காணப்படாத விடயங்கள் தொடர்பான தரவுகளைக் கோருவது மாத்திரமன்றி, அவற்றை அவர்கள் வழங்குவதற்கு கால அவகாசம்கூட வழங்காதிருப்பது, அரச அதிகாரிகளின் உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் தான் இருக்கும் சபையில் அவ்வாறான செயல்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஆளுநர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், இவ்வாறான சபையில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் வழங்க முடியாவிட்டால், 24 மணித்தியாலங்களுக்கு அத்தரவுகளை எழுத்துமூலம் வழங்குவதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டுமென்று அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்த ஆளுநர், அரச அதிகாரிகள் தம் பணிகளைத் திறம்படச் செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, அமைச்சர் நஸீர் அஹமட் சுற்றாடல்துறை அமைச்சினூடாக கடந்த இரண்டொரு வாரத்துக்குள் பாரியளவு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது என்றும் இதனால், சுற்றாடலுக்கும் பொதுமக்களுக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார்.
அத்துடன், இனிவரும் காலத்தில் அப்பகுதியிலிருந்து ஒரு அங்குலம் மணலையேனும் எடுக்க தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் கடுமையாக எச்சரித்தார்.
No comments