Vettri

Breaking News

காணிக் கொள்ளைகளை அம்பலப்படுத்திய சாணக்கியன் - அதிகாரிகள் திணறல்!!




செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமான் ஓடையில் இடம்பெறும் காணிக்கொள்ளை தொடர்பான விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் திரையிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். இன்றைய தினம்(24) செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதிகாரிகள் முன்னிலையில் இதனை திரையிட்டுக் காட்டியுள்ளார். “புளுட்டுமான் ஓடையில் காணப்படும் அரச காணியின் பல ஏக்கர் நிலங்களை ஒரு சில நபர்கள் உயிரோடு இல்லாத மற்றும் வாக்காளர் அட்டையில் பெயர் இல்லாத நபர்களது பெயர்களைப் பயன்படுத்தி அந்த நிலங்களை உரிமையாக்கி, அங்கு காடழிப்பு செய்து நிலம் சீர்செய்யப்பட்டு எல்லைகள் இடும் நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இச் செயற்பாடானது அப் பிரதேச செயலாளர், அந்த இடத்திற்கு பொறுப்பான கிராம அலுவலர், வன இலாகா அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தெரியவில்லை எனக் கூறப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் சாணக்கியன் குறித்த அதிகாரிகள் முன்னிலையில் திரையிட்டுக் காட்டியுள்ளார். இவ்வாறான சட்டவிரோத காணிக் கொள்ளைகள் அரச அதிகாரிகளின் ஆதரவுடன், அரச நாடாளுமன்ற அமைச்சர்கள் தங்கள் பினாமிகளின் பெயரில் கையகப்படுத்துவது தொடர்ந்த வண்ணமுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். புளுட்டுமான் ஓடையில் சட்டவிரோதமான முறையில் காணி பகிர்ந்தளிப்பு சம்பந்தமாக இரா.சாணக்கியனினால் வழங்கப்பட்ட எழுத்து மூலமான கடிதம் 10.04.2023 அன்று அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட போதும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்களுக்கு மாத்திரம் இன்று வரை கடிதம் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இன்றைய கூட்டத்திலும் இது தொடர்பில் ஆராயப்பட்டது. மக்களுக்கு உரிய முறையில் எதிர்காலத்தில் சென்றடைய வேண்டிய காணிகளே இவ்வாறு கொள்ளையிடப்படுகின்றது. எனவே காணிக்கொள்ளைகளை தடுக்க மக்கள் முன்வர வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

No comments