சரத் வீரசேகரவின் கருத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கண்டனம் தெரிவித்துள்ளது
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் வௌியிடப்பட்ட கருத்து நாட்டின் அடிப்படை கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிக மோசமான தாக்குதல் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிப்பது ஜனநாயத்தின் நிலைத்திருப்பிற்கு அவசியம் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது அரசாங்கத்தினதும் எதிர்த்தரப்பினதும் கடமை என்பதுடன், நீதிமன்ற செயற்பாடுகள் மீதான எந்தவொரு தலையீடும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமக்குரிய பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போக்கு மேலோங்கி வருவது குறித்து கவலையடைவதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments