கொழும்பில் 24 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உறுதிப்பாகங்களை திருடிய மூவர் கைது
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாகன உதிரிபாகங்களை திருடிய கொள்கலன் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை (4) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
24 இலட்சம் ரூபா பெறுமதியான உதிரி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக கொழும்பு, வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37, 53 மற்றும் 55 வயதுடைய களனி, கிராண்ட்பாஸ் மற்றும் நாகொல்லாகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
ராஜகிரிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் இந்த உதிரி பாகங்கள் அடங்கிய கொள்கலனை சீனாவில் இருந்து
நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளதுடன், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட நிலையில் வர்த்தகர் இறக்குமதி செய்த நிறுவனத்துக்கு அறிவித்துள்ளார்.
பின்னர் இறக்குமதி பட்டியலை சரிப்பார்த்தன் பின்னர் உதிரிபாகங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி உதிரி பாகங்கள் அடங்கிய கொள்கலனை எடுத்துச் சென்ற சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையில் அவர் மேலும் இருவருடன் சேர்ந்து கொள்கலனை திறந்து வாகன உதிரி பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 37 உதிரி பாகங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments