மழை காரணமாக இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு!!
போர்ட் ஒவ் ஸ்பெய்ன், ட்ரினிடர், குவீன்ஸ் பார்க் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் இரண்டு அணிகளுக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.போட்டியின் 3ஆம், 4ஆம் நாள் ஆட்டங்களும் சீரற்ற காலநிலை காரணமாக அவ்வப்போது ஆட்டம் தடைப்பட்டது.கடைசி நாளான திங்கட்கிழமை தொடர்ந்து மழை பெய்ததால் ஆடடம் கைவிடப்படுவதாக மேற்கிந்தியத் தீவுகளின் நேரப்படி பிற்பகல் 2.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை காலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்ததால் மதிய போசனத்திற்குப் பின்னரும்கூட இரண்டு அணியினரும் மைதானத்திற்கு சென்றிருக்கவில்லை.பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை சற்று ஓய்ந்த போதிலும் 2.00 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அப் போட்டியில் 365 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 4ஆம் நாள் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.அணித் தலைவர் க்ரெய்க் ப்றத்வெய்ட் (28), கேர்க் மெக்கென்ஸி (0) ஆகிய இருவரே ஆட்டம் இழந்தனர்.
டேஜ்நரேன் சந்தர்போல் 24 ஓட்டங்களுடனும் ஜேர்மெய்ன் ப்ளக்வூட் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.கடைசி நாளன்று தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
இந்தியா 1ஆவது இன்: 438 (விராத் கோஹ்லி 121, ரோஹித் ஷர்மா 80, ரவிந்த்ர ஜடேஜா 61, யஷஸ்வி ஜய்ஸ்வால் 57, ரவீந்த்திரன் அஷ்வின் 56, ஜொமெல் வொரிக்கன் 89 - 3 விக்., கெமர் ரோச் 104 - 3 விக்., ஜேசன் ஹோல்டர் 57 ய- 2 விக்.)மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 255 (க்ரெய்க் ப்றத்வெய்ட் 75, அலிக் அதானேஸ் 37, டேஜ்நரேன் சந்தர்போல் 33, கேர்க் மெக்கென்ஸி 32, மொஹமத் சிராஜ் 60 - 5 விக்., ரவிந்த்ர ஜடேஜா 37 - 2 விக்., முக்கேஷ் குமார் 48 - 2 விக்.)
இந்தியா 2ஆவது இன்: 181 - 2 விக். டிக்ளயார்ட் (ரோஹித் ஷர்மா 57, இஷான் கிஷான் 52 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 38, ஷுப்மான் கில் 29 ஆ.இ.)மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 365) 76 - 2 விக். (க்ரெய்க் ப்றத்வெய்ட் 28, டேஜ்நரேன் சந்தர்போல் 24 ஆ.இ., ஜெர்மெய்ன் ப்ளக்வூட் 20 ஆ.இ., ரவிச்சந்திரன் அஷ்வின் 33 - 2 விக்.)
ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ்.
No comments