Vettri

Breaking News

13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி அக்கறை : சி.வி.விக்னேஸ்வரன்!




13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் ஜனாதிபதி செயற்படுவது உறுதியாக தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “13 ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகாரத்தை விஸ்தரிக்க அல்லது அதனை ஸ்திரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அத்தோடு, மாகாணசபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள கையளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். இதுதொடர்பான எழுத்துபூர்வமான ஆவணமொன்றும் ஏற்கனவே தயாரித்து வழங்கப்பட்டிருந்தது. இதற்கு இணங்க, விசேட குழுவொன்றை ஸ்தாபிக்குமாறும் நாம் வலியுறுத்தியிருந்தோம். இதற்காக ஐவரின் பெயர்களும் எமது தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி அதற்கு இணங்கியுள்ளார். இந்தக் குழுவில் மேலதிகமாக மூன்று நபர்களை உள்வாங்கவும் அவர் இணக்கம் வெளியிட்டுள்ளார். புதன்கிழமையன்று, இது தொடர்பாக ஆராய கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை எவ்வாறு வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாம், இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தில் நடைமுறையிலிருக்கும் பொலிஸ் சேவை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். அங்கு பொலிஸாருக்கு ஆயுதம் வழங்கப்படாமல், பெட்டன் தடிகள் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அங்கு போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகிறார்கள். முறைப்பாடுகளை பதிவு செய்கிறார்கள். அத்தோடு, ஏனைய செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோன்று, ஆயுத பலம் இல்லாத பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். இதுதொடர்பாகவும் ஏனைய கட்சிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் ஜனாதிபதி செயற்படுவது உறுதியாக தெரிகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments